நேபாளத்தின் பிரபல கோவிலான பசுபதிநாத் கோவிலில் பணியாற்றிய இந்திய குருக்கள் 2 பேர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நேபாள அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள புகழ்வாய்ந்த கோவில் பசுபதிநாத் கோவிலாகும்.இங்கு பூஜைகள் மற்றும் இதர கோவில் சடங்குகளை செய்வதற்கான பணியில் இரண்டு இந்திய குருக்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் பட்டா, ராகமேந்திர பட்டா ஆகிய இரண்டு பேரும் இக்கோவிலில் பூஜைகள் செய்து வருவதற்கு உள்ளூர் மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
உள்ளூர் குருக்களே இக்கோவில் பூஜைகள் செய்வதற்கு நியமிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பசுபதிநாத் கோவிலுக்குள் நேற்று வழிபாடு நடத்த வந்த பக்தர்கள் போன்று திடீரென புகுந்த மாவோயிஸ்டுகள் சிலர், இந்திய குருக்கள் இரண்டு பேர் மீதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய குருக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா இன்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த கண்டனத்தை தெரிவித்த இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்திய குருக்களுக்கு நேபாள அரசு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டும் என்றார்.
இந்நிலையில், இந்தியாவின் இந்த கண்டனத்தை தொடர்ந்து இந்திய குருக்கள் தாக்கப்பட்டதற்கு நேபாளம் வருத்தம் தெரிவித்துள்ளது.
பசுபதிநாத் கோவிலில் இந்திய குருக்கள் தாக்கப்பட்டது மிகவும் துயரமான மற்றும் வருந்தத்தக்க சம்பவம் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நேபாள கலாச்சாரத்துறை அமைச்சர் மினிந்திரா ரிஜால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாக்குதல் நடைபெற்ற பசுபத்நாத் கோவிலில் தாக்குதலுக்க்குள்ளான இந்திய குருக்கள் இரண்டு பேரும் இன்று வழக்கமான பூஜைகளை நடத்தினர்.அப்போது அங்கு அமைச்சர் மினிந்திரா மற்றும் நேபாளத்திற்கான இந்திய தூதரக அதிகாரி ராகேஷ் சூத்தும் இருந்தனர்.