மும்பை தாக்குதல் தொடர்பாக ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹஃபீஷ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு இந்தியா அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
மும்பை தாக்குதலில் ஹஃபீஷ் சயீத் உட்பட பாகிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆறாவது கோப்பு ஒன்றை இந்தியா, சமீபத்தில் பாகிஸ்தானிடம் அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த கோப்பில் இடம்பெற்றுள்ள விவரங்கள் இந்தியா ஏற்கனவே அளித்த கோப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தவைதான் என்றும், சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு அதில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் அப்துல் பஸித் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.மும்பை தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் பாகிஸ்தான் மிகுந்த அக்கறையுடன் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நின்றுபோய் உள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது பாகிஸ்தானுக்கு மட்டும் சாதகமானதல்ல.பேச்சுவார்த்தையும், பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்களும்தான் இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று பஸித் மேலும் கூறினார்.