வன்னியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் சிறைக் கைதிகள் போன்றே நடத்தப்படுகிறார்கள் என்று இந்தியாவின் புகழ்பெற்ற புலனாய்வு இணையத் தளமான 'தெகல்கா' தெரிவித்துள்ளது.
முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக அந்த இணையத் தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
முகாம்களில் மக்கள் சிறைக் கைதிகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்று ஆர்.சுமதி கூறுகிறார். நலன்புரி முகாம்களில் தொண்டராகச் சிலநாட்கள் பணியாற்றியவர் அவர். படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் மக்களின் வேதனைகளையும் ஆதரவற்றவர்களின் நிலையையும் பெற்றோரை இழந்து அநாதைகளாகி நிற்கும் குழந்தைகளின் வேதனையையும் அவர் விவரித்தார்.
வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் பின்னர் 3 லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அங்கு எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற சரியான விவரம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட யாருக்குமே தெரியாது.
மனித உரிமை ஆர்வலர்களோ அரசியல் தலைவர்களோ, ஊடகவியலாளர்களோ அந்த மக்களைச் சென்று பார்ப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சுதந்திரமாக அணுகுவதற்கு தொண்டு நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்துலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்த கோரிக்கைகளையும் சிறிலங்கா அரசு ஏற்க மறுத்துவிட்டது.
மக்களுடன் மக்களாகத் தங்கியுள்ள விடுதலைப் புலிகளை கண்டறிந்து வேரறுக்கும் வரைக்கும் யாரையும் முகாம்களுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று அரசு திட்டவட்டமாகக் கூறி வருகின்றது. ஆனால், அந்த நடவடிக்கைகள் வெளிப்படையானவையாக இடம்பெறவேண்டும் என்ற அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ளன. விடுதலைப் புலிகளை வடிகட்டும் நடவடிக்கையை முடிந்தவரைக்கும் வெளிப்படையானதாக நடத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார்.
முகாம்களில் உயிரிழப்புக்களும் காணாமல்போகும் சம்பவங்களும் போசாக்கின்மையும் அதிகரித்து வருகின்றன என்று அனைத்துலக நாடுகள் கவலை தெரிவிக்கின்றன. இருப்பினும் முகாம்களில் உள்ள மக்கள் பயத்தின் இறுக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். ஏனெனில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன என அவர்கள் குற்றம்சாற்றுகிறார்கள்.
படையினரால் சந்தேகிக்கப்படுபவர்கள் பலவந்தமாக அவர்களின் குடும்பங்களைவிட்டுப் பிரிக்கப்பட்டு தனியான முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தமது உறவுகள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் மக்கள் கடும் துயரில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
முகாம்களின் பதிவுகளை கையாள்வதற்கான அனுமதி ஐக்கிய நாடுகள் சபைக்கோ ஏனைய அனைத்துலக நிறுவனங்களுக்கோ கிடையாது. முகாம்களில் உள்ள மக்களின் சரியான எண்ணிக்கை வெளியே தெரியவராத வரையில் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் இருந்து கொழும்பு தப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
முகாம்களில் சுகாதார நிலைமை மிக மோசமாக இருக்கின்றது என்று தொண்டு அமைப்பான சேவா லங்காவின் நிறைவேற்று இயக்குனர் வின்யா ஆர்யரட்ன கூறினார். இந்த அமைப்பு முகாம்களில் தற்போது பணியாற்றி வருகின்றது.
அடைத்து வைக்கப்பட்டுள்ள 5 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 20 சதவீதமானவர்கள், சுமார் 5 ஆயிரம் குழந்தைகள், போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் ஆர்யரட்ன, ஒரு முகாமில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக அரசு புதிய முகாம்களை உருவாக்குகிறது என்றும் தெகல்காவிடம் தெரிவித்தார்.
முகாம்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று ஆர்யரட்ன மேலும் கூறினார். அதேநேரம், ஒவ்வொரு வாரமும் முகாம்களில் 1,400 பேர் வரையில் உயிரிழக்கிறார்கள் என அனைத்துலக தொண்டு நிறுவன அதிகாரிகளை மேற்கோள்காட்டி லண்டனில் வெளியாகும் 'த டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.