சிறிலங்க இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, பிறகு சொல்லாமல் கொள்ளாமல் விலகி ஓடியவர்களின் எண்ணிக்கை 65,000 பேர் என்று சிறிலங்க நீதி, சட்ட சீர்திருத்தத் துறைகளின் அமைச்சர் சுஹண்டா காம்லாத் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்காமாலும், போதிய அனுபவம் பெறுவதற்கு முன்னரும் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்கள். இதனை எதிர்பாராத அவர்கள் இராணுவத்திலிருந்து ஓடிவிடுவது அன்றாட நிகழ்வாக இருந்தது.
இவ்வாறு போர் முனையில் இருந்து ஓடியவர்கள் 65,000 பேர் என்றும், அவர்களை தேடிப் பிடித்து கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் காம்லாத் கூறியுள்ளார்.
இவ்வாறு இராணுவத்திலிருந்து ஓடியவர்களை பிடித்து கைது செய்தவுடன், அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் காம்லாத் கூறியுள்ளார்.
இதுவரை இவ்வாறு ஓடிவிட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஓடிப் போன அனைவரையும் காவலி்ல் வைக்கும் நிலை ஏற்படு்ம் போது அவர்களுக்கென்று தனி சிறைச்சாலை உருவாக்கி அடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார்.