ஈழத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மொரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் எழுச்சிப் பேரணி நடத்தினர். அவர்கள் அளித்த மனுவை வாங்க இந்தியத் தூதரகம் மறுத்துவிட்டதால், மனுவை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழின அழிப்பை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்க அரசை வலியுறுத்தி மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் துவங்கிய பேரணியில் 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டனர்.
தமிழீழ மக்கள் சந்திக்கும் அவலங்களை வெளிக்காட்டும் வகையிலான பதாகைகளையும் தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி புறப்பட்டது.
பேரணியின் நிறைவில், போர்ட் லூயிஸில் உள்ள பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மொரீசியஸ் நாட்டு மூத்த அரசியல் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.கா.ஈழவேந்தனும் உரையாற்றினர்.
மொரீசியஸ் நாட்டின் துணைப் பிரதமரும், மூத்த அமைச்சர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய தூதரகத்தில் மனு அளிக்க தமிழர்கள் முயன்றனர். ஆனால், இந்திய தூதரக அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழர்கள், இந்திய தூதரக வளாகத்தின் சுவர் மீது ஏறி, தூதரக அதிகாரிகளின் முன்பு கொடுக்கவிருந்த மனுவை தீயிட்டுக் கொளுத்தினர்.