வன்னியில் போர் நடக்கும் பகுதிகளில் கொல்லப்படும் அப்பாவி மக்கள், சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தியுள்ளது.
மோதல் நடக்கும் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மோதல்களில் ஆயிரக்கணக்கனோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவையின் இணையத் தளத்தில், அதன் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், சிறிலங்க அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மோதல்களை நிறுத்தி, வடக்கில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொது மக்களை அங்கிருந்து வெளியேற்ற தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சிக்கியுள்ளதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கடந்த வாரம் அறிவித்தது.
அதேநேரத்தில், போரை நிறுத்தி பேச்சிற்குத் தயார் என்று கடந்த 23ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். ஆனால், அதை நிராகரித்த சிறிலங்க அரசு, ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று விடுதலைப் புலிகளை வலியுறுத்தியது.
இந்நிலையில், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதியில் ஏராளமான மக்கள் இருப்பதாகவும் அவர்கள் உணவின்றி உயிரிழப்பது குறித்தும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் தேவை - டெஸ்மன் டுட்டு
இலங்கையின் வடகிழக்கில் போரினால் ஏற்பட்டுள்ள பெருமளவு மனித அவலங்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுக்க உடனடி போர் நிறுத்தம் தேவை என நோபல் அமைதி விருது பெற்றவரும், பேராயருமான டெஸ்மன் டுட்டு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் ஆயுத போராட்டம் நடக்கும் நாடுகளில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஏற்ப இலங்கை விவகாரத்தில் தலையீட முடியும் என்றும் அக்குழுவினர் கூறியுள்ளனர்.
போர் நடக்கும் பகுதிக்கு சுதந்திரமான ஊடகவியலாளர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சரியான தகவல்களை அறிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்ட்படுள்ளது. இந்நிலையில், மனித உரிமை விழுமியங்களை மதிக்கும் பொருட்டு போரில் ஈடுபடும் தரப்பினர் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.