உலகில் உள்ள அனைத்து முன்னணி பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் புகழிடமாக விளங்குவதாகவும், இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியே பயங்கரவாத அமைப்புகளுக்கு புகழிடம் அளிக்கிறது. அங்கு அல்கய்டா மட்டுமின்றி தாலிபான், ஹக்கானி, குல்பாதின் ஹெக்மத்யர் ஆகிய அமைப்புகள் மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய குழுக்களும் அங்கு கூட்டாக இயங்குகின்றன.
மேற்கூறிய அனைத்து குழுக்களும் தனித் தனியானவை என்றாலும், பாகிஸ்தானில் அவை கூட்டாக இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகழிடம் அளிக்கும் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் அது பின்னடைவையே ஏற்படுத்தும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்ட போது சி.ஐ.ஏ.வின் துணை இயக்குனராக தாம் பணியாற்றியதைக் குறிப்பிட்ட அவர், அப்போதைய காலத்தில் சி.ஐ.ஏ. அமைப்புக்கு பாகிஸ்தான் புகழிடம் அளித்தது. அது எங்களுக்கு அளித்த பலன்களைப் பற்றி அறிந்ததால்தான், பயங்கரவாதிகளுக்கு புகழிடம் அளிக்கக் கூடாது எனக் கூறுகிறேன்.
பாகிஸ்தான் தளபதியுடன் கடந்த வாரம் நடத்திய பேச்சின் வாயிலாக, அந்நாட்டு எல்லையில் நிலவும் அபாயம் குறித்தும், அதனால் நாட்டின் நிலைத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பாகிஸ்தான் அரசு அறிந்துள்ளது எனத் தெரிய வருவதாகவும் கூறினார்.
கடந்த வாரம் வாஷிங்டனுக்கு வருகை தந்த பாகிஸ்தான் தளபதி பர்வேஸ் கயானியை ராபர்ட் கேட்ஸ் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.