வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 3,000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இத்தகவலை கொழும்புவிலிருந்து வெளிவரும் ஐலேண்ட் என்ற ஆங்கில வார ஏடு, கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து வன்னிப் பகுதியில் நடைபெறும் சண்டையில் சுமார் 15,000 சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை மறுத்த கேகலிய ரம்புக்வெல, இந்தக் காலப் பகுதியில் 3,000 படையினர்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தற்போது 2,000 பேர் மட்டுமே முல்லைத்தீவுப் பகுதியில் உள்ளனர் என்றும், அவர்களை எளிதில் நாங்கள் வெற்றி கொள்வோம் என்றும் கேகலிய ரம்புக்வெல நம்பிக்கை தெரிவித்துள்ளார்.