மும்பையின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வு குறித்து ஆராயவும், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்க அயலுறவு உதவி அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் பாகிஸ்தான் செல்கிறார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அது தொடர்பான புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பேச இன்று பாகிஸ்தான் வரும் ரிச்சர்ட் பெளச்சர், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுஃப் ராசா கீலானி, அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், அந்நாட்டு இராணுவத் தலைமைத் தளபதி மைக் முல்லன் ஆகியோரைத் தொடர்ந்த தற்பொழுது ரிச்சர்ட் பெளச்சர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.