நியூயார்க்: அமெரிக்க பொருளாதாரம் மோசமடைந்து வருவதன் காரணமாக கடந்த வாரத்தில், அதாவது டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 30,000 பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
கடந்த (நவம்பர்) மாதத்தில் மட்டும் 5,33,000 பணியாளர்கள் வேலையிழ்ந்துள்ளதாகவும், கடந்த 34 ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார பாதிப்பு காரணமாக தொலைத்தொடர்பு, ஸ்டீல், வங்கி மற்றும் நிதித் துறைகள் உட்பட பல துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெருமளவு நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆய்வுக் கழக புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியதாகக் கருதப்படும் இந்த பொருளாதார நசிவிற்குப் பிறகு சுமார் 1.9 மில்லியன் பேர் வேலையிழந்துள்ளனர். இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்த வேலையிழந்தோரில் மூன்றில் இரண்டு பங்கினர் என்று அந்த புள்ளிவிவரம் கூறியுள்ளது.
மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏடி அன்ட் டி (AT & T) நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 4 விழுக்காட்டு பணியாளர்களை குறைத்து 12,000 பேர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.
கிரெடிட் சுய்ஸ்ஸி நிறுவனம் அடுத்த முதல் அரையாண்டிற்குள் மேலும் 5,300 பேரை ஆட் குறைப்பு செய்யவுள்ளது.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் இந்த நிறுவனத்தின் நவம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நஷ்டம் 2.5 பில்லியன் டாலர்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடோப் நிறுவனம் உலகம் முழுதும் முழு நேரப் பணியாளர்கள் 600 பேரை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.