போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் முயற்சியால் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு தமிழக மக்கள் அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்கள் இரண்டு, மூன்று கட்டங்களாக இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் நேற்று உணவுப் பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது. இன்று உடை உள்ளிட்ட மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 8,000 உணவுப் பொட்டலங்களும், 2,000 உடைப் பொட்டலங்களும் வந்துள்ளதாகவும், இவை இன்று முதல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளமான புதினம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
நிவாரணப் பொருட்கள் சேதம்!
இதற்கிடையில் வன்னி மக்களுக்கு அனுப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
உடைக்கப்பட்ட மூட்டைகளின் வாய்ப்பகுதி கட்டப்பட்டுத் தங்களுக்கு வழங்கப்பட்டதாக மக்கள் புகார் தெரிவித்தனர். நிவாரணப் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது சிறிலங்கா ராணுவம்தான் என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.