அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவிடம், கியூபா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டின் முன்னாள் அதிபரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஸ்ட்ரோ எழுதியுள்ள கடிதத்தில், ஒபாமாவுடன் எந்த இடத்தில் விரும்பினாலும் அங்கு பேச்சு நடத்த முடியும். அதேவேளையில் ஆசை காட்டி மோசம் செய்யும் நாடகம் எங்களிடம் (கியூபாவிடம்) பலிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவுடனான பேச்சுவார்த்தையின் போது கியூபா மக்களின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ளப்படாது என்றும் காஸ்ட்ரோ தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
காஸ்ட்ரோவின் தம்பியும், கியூபாவின் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ, கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நடுநிலையான இடத்தில் ஒபாமாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.
கம்யூனிஸ்ட் நாடான கியூபா கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. சுமார் 50 ஆண்டு காலம் அந்நாட்டின் அதிபராக ஃபிடல் காஸ்ட்ரோ இருந்த போது அவரை கொலை செய்ய அமெரிக்கா நூற்றுக்கணக்கான முறை முயன்றது குறிப்பிடத்தக்கது.