மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸிடம் உறுதியளித்துள்ளதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று இஸ்லாமாபாத்திற்கு வந்த காண்டலீசா ரைஸ், அதிபர் சர்தாரியை சந்தித்துப் பேசினார்.
இருவரது பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிபர் சர்தாரி விடுத்துள்ள அறிக்கையில், மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா நடத்தும் புலனாய்விற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது என்பதிலும் தமது அரசு உறுதியுடன் இருப்பதாக சர்தாரி அதில் கூறியுள்ளார்.