பாகிஸ்தானிற்கான இந்தியத் தூதர் சத்யபிரத பாலை அழைத்துள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகம், மும்பை தாக்குதல் தொடர்பாகத் தங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாற்றுக்களைக் கூற வேண்டாம் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் மொஹம்மது சாதிக், "பாகிஸ்தானின் தூதரை புது டெல்லியில் நேற்றிரவு அயலுறவு அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் சந்தித்தபோது, இந்தியத் தூதரை எங்கள் அயலுறவுச் செயலர் சல்மான் பஷீர் இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்" என்றார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் அதிகாரப்பூர்வத் தகவல் பரிமாற்றம் முழுமையாக நடந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், கொடூரமான பயஙகரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களும் பார்வைகளும் அடிக்கடி பறிமாறக்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இந்தியத் தூதருடனான சந்திப்பின்போது மும்பையில் நடந்துள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் பலியானோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ள சல்மான் பஷீர், விசாரணையில் பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானிற்குத் தொடர்பிருப்பதாக இந்திய ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரும் ஆதாரமில்லாத செய்திகளைத் தான் மறுப்பதாகவும், இதுபோன்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் சல்மான் பஷீர் கூறியுள்ளார்.