மும்பையில் 200 பேரின் உயிரைக் குடித்த பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டியவர்கள் பாகிஸ்தானில் இருந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவிற்கு உரிமையுள்ளது என்று அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சிக்காகோ நகரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், தனது நிர்வாகத்தில் இடம்பெறப்போகும் பாதுகாப்பு அமைச்சக உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்து பேசிய பராக் ஒபாமா, “இறையாண்மையுடைய நாடுகள் தங்களின் நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உரிமை உள்ளது” என்று கூறினார்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள அல் கய்டா பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும், அமெரிக்கா நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என்று அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்.
“மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை புலனாய்வு செய்து உறுதிபடுத்த அனுமதிக்க வேண்டும், அதுவே முக்கியம் என்று கருதுகிறேன். இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடித்து சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு இந்தியா எடுக்கும் முயற்சியில் அமெரிக்கா முழுமையாக துணை நிற்கும், உலக சமூகமும் எனது இந்த நிலைப்பாட்டை ஏற்கும் என்று கருதுகிறேன்” என்று கூறிய ஒபாமா, “இத்தாக்குதலில் உயிரழந்த 6 அமெரிக்கர்கள் உட்பட அனைவருடைய குடும்பத்தினருக்கும் நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நமது எண்ணங்களும் பிரார்த்தனையும் செல்லட்டும்” என்று கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசியதாகவும் ஒபாமா தெரிவித்தார்.