மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பாகிஸ்தானின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்துப் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பேச்சாளர் ஜாகித் பஷீர் கூறுகையில், "மும்பை தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஒத்துழைப்பு தொடர்பாகவும், சில தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் ஐ.எஸ்.ஐ. தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.
இந்த வேண்டுகோளைப் பாகிஸ்தான் பிரதமர் ஏற்றுக்கொண்டு உள்ளார். ஐ.எஸ்.ஐ. தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாசா விரைவில் இந்தியா செல்லவுள்ளார். அதற்கான தயாரிப்புப் பணிகளை இரண்டு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன" என்றார்.
பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாகப் பாகிஸ்தான் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் தலைவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.