இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான காசா பகுதியில் அதிகரித்துள்ள வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அப்பகுதியில் வாழும் 70,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "காசா வன்முறைகள் தொடர்பாக இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. அங்கு மனிதாபிமான உதவிகள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை" என்று கூறியுள்ளது.
மேலும், "காசா எல்லையில் வசிக்கும் 70,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதைத் தடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வன்முறைகளுக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்பகுதியில் உடனடியாக அமைதி ஏற்படுத்தப்படும் என்றும், குறைந்தபட்ச மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.