அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிபர் புஷ்: அமெரிக்காவின் 44வது அதிபரும், தனக்கு பின்னர் அதிபர் பதவியை ஏற்பவருமான பராக் ஒபாமாவுக்கு, ஜார்ஜ் புஷ் வாழ்த்துத் தெரிவித்ததுடன், தாம் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்துக்கு குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் சர்கோஸி: உலகம் முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஒபாமாவை அதிபராக தேர்வு செய்ததன் மூலம் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மக்கள் வலு சேர்த்துள்ளனர். பல்வேறு சவால்களை சந்தித்து வரும் வேளையில், அமெரிக்க தேர்தல் முடிவுகள் பிரான்ஸ், ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்கோஸி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் தாரோ அஸோ: ஆசிய-பசிபிக் பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ முக்கிய காரணமாக அமெரிக்க-ஜப்பான் நட்புறவு இருந்து வருகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா தலைமையிலான அரசுடன், ஜப்பான் தனது நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதுடன், உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, சுற்றுச்சுழலை மேம்படுத்துவது என பல்வேறு சர்வதேச பிரச்சனைகளிலும் இணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸி. பிரதமர் கெவின் ரூட்: புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா தனது வெற்றி உரையில் நம்பிக்கை தெரிவித்துள்ளது, அந்நாட்டு மக்களுக்கான நம்பிக்கை மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களிலும், விவகாரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த உலகிற்கும் அளிக்கப்பட்ட நம்பிக்கையாக அது கருதப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நியூஸீ. பிரதமர் ஹெலன் கிளார்க்: சர்வதேச நிதி நெருக்கடி, புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் பிரச்சனைகள் கடும் நெருக்கடி அளித்து வரும் நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா பொறுப்பேற்க உள்ளார். இப்பிரச்சனைகளைக் களைய நியூஸீலாந்து அரசு அவருடன் மிக நெருங்கிய முறையில் இணைந்து செயல்படும் என தனது வாழ்த்துச் செய்தியில் கிளார்க் கூறியுள்ளார்.
பாக். அதிபர் சர்தாரி: பாகிஸ்தான் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதிபர் தேர்தல் முடிவின் மூலம் அமைய உள்ள புதிய அரசின் தலைமையில் அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் மேலும் வலுப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.