அமெரிக்க அதிபர் தேர்தலில் முதலில் வாக்குப்பதிவு நடைபெற்ற நியூஹாம்ப்ஷையரின் டிக்ஸ்வில்லி நாட்சில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.
அங்கு பதிவான வாக்குகளின்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு 15 வாக்குகளும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 6 வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், சுயேச்சையாக போட்டியிட்ட ரால்ஃப் நாடெருக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த 1948ஆம் ஆண்டு முதல் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில்தான் முதன் முதலில் வாக்குப்பதிவு துவக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தற்போதைய தேர்தலில் அதே பாரம்பரிய முறை பின்பற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதியின் மூத்த அதிகாரி ரிக் எர்வின் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் 100 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2004இல் அமெரிக்க அதிபர் பதவிக்கும் ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறையாகப் போட்டியிட்ட போது டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.