இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டுமானால், விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு முதலில் சரண் அடையட்டும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியிருக்கிறார்.
கொழும்பில் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு ராஜபக்சே அளித்த பேட்டியில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்து விட்டதாகவும், அவர் விரைவில் பிடிபடுவார் என்றும் கூறினார்.
இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம் என்று கூறிய அவர், அதனை போர் என்று நான் கூற மாட்டேன். ராணுவ நடவடிக்கைதான் என்றார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், அவரை இந்தியா விரும்பினால் விசாரணைக்காக அங்கு அனுப்பி வைப்போம் என்றும் ராஜபக்சே குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் நிச்சயம் மதிக்கமாட்டார்கள் என்றும், அவர்கள் முதலில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையட்டும். நாங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கிறோம் என்று அவர் கூறினார்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தம்மிடம் தொலைபேசியில் பேசிய போது, போர் நிறுத்தம் செய்யும்படி கோரவில்லை. அப்பாவி தமிழர்கள் நிலை பற்றி தான் அவர் கவலை தெரிவித்தார் என்று அவர் கூறினார்.
என்றாலும் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் ராஜபக்சே கூறினார்.