மேற்காசியப் பிரச்சனைக்கு நியாயமான, விரிவான தீர்வு சாத்தியமே என்றும், பாலஸ்தீனர்களின் விருப்பமான இறையாண்மையுடன் கூடிய சுதந்திர நாடு அமைய தனது முழு ஆதரவு உள்ளது என்றும் இந்தியா கூறியுள்ளது.
டெஹ்ரானில் ‘இந்தியா - ஈரான்: புராதன நாகரீகங்களும் நவீன தேசங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் இன்னமும் நிலைநிறுத்தப்படாதது கவனிக்கவேண்டிய பிரச்சனையாக இந்தியா கருதுகிறது என்றும், பாலஸ்தீனப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்றும் பேசினார்.
“இப்பிரச்சனை அம்மக்களை மட்டுமே பாதிக்கவில்லை, இந்த மண்டலம் முழுவதிலும் அதன் எதிர்மறையான தாக்கும் எதிரொலிக்கிறது” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாயமான, விரிவானத் தீர்வு காணப்படுவது சாத்தியமே என்று கூறினார்.
பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான தனி நாடாக, இன்று அதன் எதிரி நாடாக உள்ள இஸ்ரேலுடன் அமைதியுடன் நீடிப்பது சாத்தியமே என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.