அரசு முறை சுற்றுப்பயணமாக பீஜிங் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியை இன்று சந்தித்துப் பேசினார்.
கடந்த 3 மாத காலத்தில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இது 2ஆவது முறையாகும்.
ஜப்பானில் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பீஜிங் சென்ற பிரதமர், அங்கு நடைபெறும் `ஏசெம்' உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
இதே மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானியை இன்று சந்தித்த மன்மோகன் சிங், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியை கடந்த மாதம் நியூயார்க்கில் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தற்போது கிலானியைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்தாரியுடனான சந்திப்பின் போது, தீவிரவாதத்தை இணைந்து எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த ஆகஸ்டு மாதம் கொழும்புவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின்போது, கிலானியை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் முன்னேற்ற நடவடிக்கையாக இரு தலைவர்களின் பேச்சுகள் முக்கியத்துவம் பெறும் என்று பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.