இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் இரு தரப்பிலும் 49க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா வடமேற்கு பாலமோட்டை-குஞ்சுக்குளம்-வன்னிவிளாங்குளம் பகுதிகளில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதேபோல, கிளிநொச்சி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அக்கராயன் பகுதியை நோக்கி முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான எதிர்த்தாக்குதலில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 22 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 53 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் பலியான படையினரின் 4 சடலங்களையும், தப்பிச்சென்றுள்ள படையினர் விட்டுச்சென்ற பெருமளவிலான ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தங்கள் தரப்பில் குறைந்தளவு இழப்புக்களே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அக்கராயன் பகுதித் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், தங்கள் தரப்பில் 3 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாகவும் சிறிலங்கா ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் படை முகாமிலிருந்து தங்கவேலாயுதபுரம் படை முகாமுக்கு சுற்றுக்காவலுக்குச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.