இந்தோனேஷியாவின் வடகிழக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் மொலுக்கா கடல் பகுதியில் 55 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானதாக தெரிவித்துள்ள இந்தோனேஷிய நிலநடுக்க மையம், உடனடியாக சுனாமி எச்சரிக்கையையும் வானொலி, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது. எனினும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.