பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு இடங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில், இஸ்லாமாபாத்தின் வடமேற்கே 355 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், ஸ்வாட், முஷாஃபராபாத், அப்போடாபாத் மற்றும் கில்ஜித் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இதேபோல், நேற்றும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.3 ஆக பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.