ஜார்ஜியாவுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததை நியாயப்படுத்த, தஜிகிஸ்தானில் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் தலைவர்களிடம் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் ஆதரவு கோருகிறார்.
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் தலைவர்கள் தஜிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இன்று மாநாட்டை துவங்குகின்றனர். இதில் ரஷ்யா, சீனா, கசகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்நிலை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் மங்கோலியா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகலின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றன.
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு சர்வதேச சமூகத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் என தாம் நம்புவதாகவும், இது தங்களுக்கு எதிரான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்றும் டுஷான்பே மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் மெத்வதேவ் கூறியதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும் தஜிகிஸ்தான் மாநாட்டில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜிய தூதரக அதிகாரிகள் குறைப்பு: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் செயல்பட்டு வரும் ஜார்ஜிய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை ஜார்ஜியா அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
ஜார்ஜியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஓசிடியா மற்றும் அப்காஷியா ஆகிய பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்ததைத் தொடர்ந்து ரஷ்யாவுடனான தூதரக தொடர்புகளை ஜார்ஜியா துண்டித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக ரஷ்யாவில் உள்ள ஜார்ஜிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைந்தபட்ச எண்ணிக்கைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக ஜார்ஜிய வெளியுறவு அமைச்சர் நினோ கலன்டாட்ஸியை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.