அமர்நாத் பிரச்சனையால் ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தில் அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அமர்நாத் கலவரம் குறித்து இந்தியா முழுமையான, சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.வின் மனித உரிமைக்கான தூதரகம் சார்பில் இந்திய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசப்பட்டதாகவும், அமர்நாத் பிரச்சனை காரணமாக எழும் கலவரத்தை ஒடுக்கும் போது மக்களின் கருத்து சுதந்திரம், போராட்டம் நடத்தும் உரிமைகளை மதிப்பதுடன், சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என ஐ.நா. அப்போது வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரக்காரர்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்தும் விடயத்திலும், நிலவரம் கட்டுப்பாட்டை மீறும் சமயத்தில் துப்பாக்கிசூடு நடத்துவதிலும் இந்திய அதிகாரிகள் தங்கள் வரையறைக்குள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா. கூறியுள்ளது.
இதற்கிடையில், அமர்நாத் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் பல்வேறு குழுக்கள், அமைப்புகளின் தலைவர்களுக்கு ஐ.நா. விடுத்துள்ள கோரிக்கையில், பிரச்சனைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், ஆயுதங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போராட்டத்தின் போது கையாளுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமர்நாத் பிரச்சனை தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி மூன் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரது செய்தித் தொடர்பாளரும் இப்பிரச்சனையில் எந்தக் தெரிவிக்க முடியாத எனக் கூறிய நிலையில், ஐ.நா.வின் மனித உரிமைக்கான தூதரகம் இந்திய அதிகாரிகளிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.