பாகிஸ்தானில் சாலையோரத்தில் இருந்த ஓட்டலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள இந்த ஓட்டலில் நேற்று நள்ளிரவு குண்டு வெடித்தது. சுமார் 3.5 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த ஓட்டலில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் ஆவர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள சிஹலா காவல் துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலில் ஓட்டலில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்தான் வெடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் உரிமையாளர் ராஸ் வாலி என்பவர் நாங்கள் சமையலுக்கு எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவதில்லை, மண்ணெண்ணெய் அடுப்புதான் பயன்படுத்தினோம் என்று கூறி சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வெடிகுண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாக ஒரு சிறுவன் ஓட்டலில் இருந்த ஒரு இருக்கைக்கு அடியில் பை ஒன்றை வைத்ததைப் பார்த்ததாக கூறியுள்ளனர்.
குண்டு வெடித்த இடத்தில் இருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல் துறை கண்காணிப்பாளர் கம்ரான் அடில் கூறியுள்ளார்.