பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுவை பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிகள் இன்று தாக்கல் செய்தன.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (P.P.P.) சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி போட்டியிட உள்ளார்.
மற்றொரு முக்கிய கட்சியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சயீத்-உஸ்-ஜமான் சித்திக் போட்டியிட உள்ளார்.
இதையடுத்து, ஆசிப் அலி சர்தாரி சார்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஷெர்ரி ரகுமான், குர்ஷித் ஷா ஆகியோர் கூட்டணி கட்சிகளான அவாமி தேசிய கட்சி, ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் தலைவர்களுடன் தேர்தல் ஆணையத்துக்குச் சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் குசி முகமது ஃபரூக்கிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
சர்தாரி சார்பில், ஏராளமான வேட்பு மனுக்கள் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்தாரியின் சகோதரி ஃபரியல் தல்பூர் பெயரிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் சர்தாரியின் மாற்று வேட்பாளராக இருப்பார்.
அவாமி தேசிய கட்சியின் தலைவர் அஸ்பான்டையர் வாலி கான், ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் கட்சித் தலைவர் மவுலானா ஃபசலூர் ரகுமான் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கலின் போது சர்தாரியை ஆதரித்து கையெழுத்திட்டனர்.
இதேபோல், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சயீத்-உஸ்-ஜமான் சித்திக் சார்பில் அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த பாகிஸ்தான் அரசுக்கு விதித்திருந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி நேற்று விலக்கி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.