அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக, குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க வாழ் இந்தியரும், லூசியானா மாகாண கவர்னருமான பாபி ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைனும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக டெல்லோவார் செனட்டர் ஜோசப் பிடேனை பராக் ஒபாமா கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்ந்தெடுத்துள்ளார்.
அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளருக்கு அமெரிக்க வாழ் இந்தியரும், அமெரிக்காவின் லூசியானா மாகாண கவர்னருமான பாபி ஜிண்டாலை குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கைன் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னசோட்டாவில், புனித பால் என்னுமிடத்தில், குடியரசுக்கட்சியின் தேசிய மாநாடு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்கு நாள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய பேச்சாளர்களில் பாபி ஜிண்டாலும் ஒருவர்.
இந்த நான்கு நாள் மாநாட்டில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளராக பாபி ஜிண்டால் பெயரை ஜான் மெக்கைன் அறிவிப்பார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
பாபி ஜிண்டால், இந்த மாநாட்டில் செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 10 மணி முதல் 11 மணி வரை பேச திட்டமிட்டுள்ளார். கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் பெயரை அறிவித்தப் பிறகு பாபி ஜிண்டால் பேச உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின், லூசியானா மாகாண கவர்னராக உள்ள பாபி ஜிண்டால், அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவழி கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.