பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடன காலத்தில் அப்போதைய அதிபர் முஷாரஃப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரும் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவர் எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.
‘தி நியூஸ்’ என்ற நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனத் குறிப்பிட்ட அவர், இது ஒருநாளில் முடிந்துவிடக் கூறிய பிரச்சனையல்ல என்பதால், கூட்டணி தலைவர்களில் ஒருவரான நவாஸ் ஷெரீஃப் விடுத்த காலகெடுவுக்குள் (இன்றுடன் முடிகிறது) நீதிபதிகளை பதவியில் அமர்த்த முடியாது என்றார்.
இதற்கிடையில், நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான காலக்கெடுவை அறிவிப்பதுடன், அதிபர் தேர்தலை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி நடத்துவதாக அறிவித்தால் பி.பி.பி உடன், ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கூட்டணியை தொடரும் என அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்த பிரச்சனையில் ஜர்தாரிக்கும், நவாஸ் ஷெரீஃப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்த காலத்தில் தாம் சில தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எழுத்துப்பூர்வமாக அவர் நாடாளுமன்றத்திற்கு கடிதம் அளித்தால், நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ள ஜர்தாரி, இக்கடிதத்தை முஷாரஃப் அளித்தால் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தாமல் விடுவிக்க முடியும் என்று கூறியதாக அந்த நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
எனினும், முஷாரஃப்பை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையில் நவாஸ் ஷெரீப் கட்சி பங்கேற்காது என்றும் கூறப்படுகிறது.