ஒருமனதான சண்டை நிறுத்த உடன்படிக்கைக்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது.
தலிபான் தீவிரவாதிகள் உண்மையிலேயே அமைதிப்பேச்சு வார்த்தைக்கு தாயாராக இருந்தால், முதலில் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கட்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
பழங்குடியின ஜிர்கா பிரிவினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த ஆலோசனைக்குப் பிறகு, தலிபான் செய்திதொடர்பாளர் மவுல்வி ஓமர் நேற்று சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்.
பாதுகாப்பு படையினருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தலிபான் தீவிரவாதிகள் நிறுத்த வேண்டும் என்ற ஜிர்காவின் வேண்டுகோளை தலிபான் ஏற்றுக் கொண்டது என்று கூறிய மவுல்வி ஓமர், தங்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்திக் கொண்டால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.
எனினும், தலிபான் தீவிரவாதிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடும்வரை, அரசு சண்டை நிறுத்தத்தை கருத்தில் கொள்ளாது என்றும் பழங்குடியினப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்த மேலும் அதிகப்படியான பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
மேலும், இதுவரை 550 தீவிரவாதிகளும், 16 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.