பாகிஸ்தானில் அடுத்தமாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட உள்ள ஆசிப் அலி சர்தாரிக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீஃப் நிபந்தனை விதித்துள்ளார்.
பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி சர்தாரியை அதிபர் வேட்பாளர் போட்டிக்கு நிறுத்த அக்கட்சியின் மத்திய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள சர்தாரி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவை கோருவதற்கு முன்பு, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்பட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் நிபந்தனை விதித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் சர்தாரிக்கு ஆதரவு தெரிவிக்க கேட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணை பொது செயலர் ரசா ரப்பானி, அமைச்சர் ஷெர்ரி ரகுமான், செய்யது குர்ஷித் ஷா, சிந்து மாகாண முதலமைச்சர் குயிம் அலி ஷா கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் நவாஸ் ஷெரீஃப்பை சந்தித்தனர்.
அப்போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்பட அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மீண்டும் பணியில் அமர்த்தி சர்தாரி தான் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றட்டும் என்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.
இதற்கிடையே, நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நவாஸ் ஷெரீஃப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். சர்தாரிக்கு விதித்த இந்த கெடுவை நவாஸ் ஷெரீஃப் 27ஆம் தேதி வரை நீடித்துள்ளார்.