பாகிஸ்தானின் அதிபர் வேட்பாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) இணைத் தலைவர் ஆஸிப் அலி ஜர்தாரியை நிறுத்த அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் நேற்றிரவு நடந்த பி.பி.பி. கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், அதிபர் பதவிக்கு ஜர்தாரியே ஏற்ற நபர் என ஒருமித்த கருத்து ஏற்பட்டதாகவும், முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான முட்டஹிடா குவாமி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஜர்தாரியை அதிபர் பதவியில் நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நாளை நடைபெற உள்ள பி.பி.பி. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் பதவியில் முஷாரஃப் இருந்த போது பதவிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை 22ஆம் தேதிக்குள் (நாளை) மீண்டும் நியமிக்காத பட்சத்தில், கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகும் என நவாஸ் ஷெரீப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜர்தாரியை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பி.பி.பி. வலியுறுத்தத் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரீப், முஷாரஃப் பதவியில் இருந்த போது நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தாவிட்டால், அது ஜனநாயகத்திற்கு எதிரானதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த பி.பி.பி. ஒப்புக்கொள்ளாவிட்டால், ஆளும் கூட்டணியில் இருந்து விலகும் கட்டாயத்திற்கு தமது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி தள்ளப்படும் என்று எச்சரித்தார். எனினும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் தமது கட்சி ஈடுபடாது என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
பலுசிஸ்தான் அல்லது வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளதால், அதிபர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.