"நாட்டு நலனே மிகவும் முக்கியம் என்று செயல்பட்டேன்" என பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மிகவும் உருக்கமாக கூறினார்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தப்படி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியில் இருந்து விலகுவதாக இன்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி முதல் தனிப்பெரும் கட்சியாகவும், மற்றொரு முக்கிய கட்சியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) இரண்டாவது பெரிய கட்சியாகவும் விளங்கியது.
இத்தேர்தலில் அதிபர் முஷாரஃப்-ன் ஆதரவுப் பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து, பெனாசீரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீஃப்-ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் யூசுப் ரஸா கிலானி பிரதமராக பதவியேற்றார்.
இந்த இரண்டு கட்சிகளும் அதிபர் முஷாரஃப்பை அப்பதவியில் இருந்து விலக்க பதவியேற்ற நாள் முதலே கங்கணம் கட்டிக்கொண்டு வந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப்பும் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் அதிபர் முஷாரஃப்பை தாமாகவே பதவியில் இருந்து விலக கோருவது என்றும் அவ்வாறு அவர் மறுக்கும் பட்சத்தில் முஷாரஃப்-க்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) கொண்டுவருவது என்றும் முடிவெடுத்தனர்.
அவருக்கு நேற்று இரவு வரை கெடு விதித்தனர். பின்னர் கெடுவை மேலும் 2 நாட்கள் நீடித்தனர். அதன்படி நாளைக்குள் பதவி விலகி விட வேண்டும் என்று எச்சரித்தனர்.
இந்நிலையில் அதிபர் முஷாரஃப் இன்று நண்பகல் 1 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும், அப்போது முக்கிய முடிவுகளை அவர் அறிவிப்பார் என்றும் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ரஷித் குரோசி தெரிவித்திருந்தார். இதனால் உலகமே அதிபர் முஷாரஃப்-ன் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தது.
அதன்படி இன்று நண்பகல் ஒரு மணியளவில் உரையாற்றிய அதிபர் பர்வேஸ் முஷாரஃப், "இன்று எனக்கு முக்கியமான நாள். முக்கிய சில முடிவுகளை இன்று எடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன். பாகிஸ்தானின் கொள்கைகளை சர்வதேச அளவில் உயர்த்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக நான் பாகிஸ்தானின் முன்னேற்றத்திறகு மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறேன்.
ஆனால் இன்று சிலர் என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நான் எப்போதும் பாகிஸ்தான் வளர்ச்சி பெற பெருந்தன்மையுடன் பாடுபட்டுள்ளேன். என்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பவர்கள் உண்மையில் இந்த நாட்டை ஏமாற்ற நினைக்கிறார்கள். நான் நாட்டு நலனே முக்கியம் என்று செயல்பட்டவன்.
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதது. அந்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை. தீவிரவாதிகளின் கையில் பாகிஸ்தான் சிக்காமல் காப்பாற்றி, இந்த நாட்டை நல்ல விதமாக வழி நடத்தினேன்.
ஜனநாயகம் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கையுண்டு என்பதால் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்தேன். ஆனால் சில துரோகிகளால் இன்று பாகிஸ்தானுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் எனக்கு குறி வைத்துள்ளனர். ஆனால் நான் எது பற்றியும் கவலைப்படவில்லை. பாகிஸ்தானுக்காகவும், பாகிஸ்தான் மக்களுக்காகவும் நான் செய்த சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன்.
பன்னாட்டு அரங்கில் பாகிஸ்தான் என்றால் தீவிரவாத நாடு என்று இருந்த அவப்பெயர் நீக்கப்பட்டது. இதற்காகவே நான் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகியதோடு ஜனநாயக பாதைக்கு வந்தேன். நான் செய்த எல்லா பணிகளும் பாகிஸ்தான் வளர்ச்சிக்கே பயன்பட்டன.
எந்த தவறும் செய்யாத என் மீது அவர்கள் எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. ஒரு குற்றச்சாட்டை கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. அதிபர் பதவியை விட பாகிஸ்தான் தான் எனக்கு பெரியது. கண்டனத் தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
எதையும் யாரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் அதிபர் பதவியில் இருந்து நானாவே விலகிக் கொள்கிறேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களிடமே விட்டு விடுகிறேன். அவர்களே தீர்ப்பு வழங்கட்டும்" என்று முஷாரஃப் உருக்கமாக பேசினார்.