நேபாள துணை அதிபர் பர்மநந்தா-ஜா வீட்டில் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு ராணுவ வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
பசுபதிநாத் கோயில் அருகே கவுரிகாத் பகுதியில் உள்ள பர்மநந்தா-ஜா வீட்டின் மீது நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய முக்தி சேனா என்ற அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பர்மநந்தா-ஜா வீட்டில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நேபாளத்தின் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்ட பர்மநந்தா-ஜா, பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை ஹிந்தியில் படித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.