பாகிஸ்தான் அதிபர் பதவிவை முஷாரப் தனது ராஜினாமா செய்வார் என்றும், அதற்கு முன்பாக இன்று பிற்பகல நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்ற இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் பர்வேஸ் முஷாரப்பை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, பாகிஸ்தானில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன. அதற்கு முன்பாக அவராகவே பதவி விலக வேண்டும் என்றும் அவை கெடு விதித்திருந்தன.
இந்நிலையில், இன்று காலை சட்ட நிபுணர்களுடனும் அரசியல் ஆலோசகர்களுடனும் அதிபர் முஷாரப் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் மேற்கொண்ட முடிவின்படி, தனது பதவியை ராஜினாமா செய்ய முஷாரப் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் முஷாரப் சிறப்புரை ஆற்றவுள்ளதாகக் கூறினார். முஷாரப் பதவி விலக மாட்டர் என்ற குரேஷி, தன் மீதான புகார்களுக்கு அவர் பதிலளிப்பார் என்றார்.
இதற்கிடையே, பதவி விலகிய பின் முஷாரப் சவுதி அரேபியா செல்லக்கூடும் என்று வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.