சீனத் தலைநகர் பீஜிங்கில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தில் இன்று நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர்களுடன் உடன் பீஜிங் சென்றிருந்த இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் அலுவலவர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் சீனாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ், இந்திய தேசியக் கொடியை ஏற்றி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையை வாசித்தார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர். எனினும் இந்த விழாவில் பங்கேற்பதால் ஒலிம்பிக் போட்டியின் மீதான கவனம் சிதறக் கூடும் என்பதால் இந்திய வீரர்களுக்கு இவ்விழாவில் பங்கேற்க விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பீஜிங்கில் இந்திய தேசியக் கொடி இன்று பட்டொளி வீசிப் பறப்பது இது 2வது முறையாகும் என்று தெரிவித்த சுரேஷ் கல்மாடி, முன்னதாக அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்ற போது இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார்.
அபினவ் வென்ற தங்கப் பதக்கம் ஒலிம்பிக் விளையாட்டுகளை இந்தியாவில் ஊக்குவிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்த கல்மாடி, இளைஞர்கள் பலரும் இனி ஆர்வத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவர் என நம்பிக்கை தெரிவித்தார்.