பாகிஸ்தானின் 62-வது சுதந்திரத் தினத்தையொட்டி அந்நாட்டின் இஸ்லாமாபாத் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது.
அரசிடம் இருந்து பெற்ற உத்தரவையடுத்து, இஸ்லாமாபாத் விமானநிலையத்தில், "பெனாசீர் பூட்டோ பன்னாட்டு விமானநிலையம்" என்ற பெயர் எழுதப்பட்ட புதிய போர்டை விமானநிலைய நிர்வாகம் வைத்தது.
இதேபோல், பெனாசீர் பூட்டோ தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைப் பலனின்றி இறந்த ராவல்பிண்டியில் உள்ள பொது மருத்துவமனை, "பெனாசீர் பூட்டோ மருத்துவமனை" என்றும் இன்று பெயர் மாற்றப்பட்டது.
இஸ்லாமாபாத் விமானநிலைய பெயர் மாற்ற முடிவை கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி அறிவித்தார்.
பெனாசீர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.