ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 8-வது மாடியில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
27 வயதான அந்த இந்தியர் கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த கண்டெய்னரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிரேன் திடீரென நகர்ந்து கண்டெய்னரை திருப்பியது. அதே நேரத்தில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளியும் அந்த மாடியில் இருந்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலிருந்து கீழே விழுந்த அவர் அங்கிருந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து காவல் துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இறந்தவரின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.