ஜப்பானில் 63-வது ஹிரோஷிமா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஜப்பானின் ஹோன்ஷூ தீவில் உள்ள பெருநகரமான ஹிரோஷிமா மீது இரண்டாம் உலகப்போரின் போது கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமெரிக்கா 'சின்னப் பையன்' (லிட்டில் பாய்) என்ற அணுகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த அணுகுண்டு அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். 'சின்னப்பையன்' அணுகுண்டு 29 இன்ச் விட்டமும், 126 இன்ச் நீளமும் 9700 பவுண்ட் எடையும் யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்டதாகும்.
இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்விடத்திலேயே உடல் சிதைந்து பலியானார்கள். மேலும் பலர் பல ஆண்டுகளாக அணுக்கதிர் வீச்சின் பாதிப்புக்கு உள்ளாகி இறந்தனர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அணுகுண்டு வீசப்பட்ட நேரமான காலை 8.15 மணிக்கு மணி ஒலித்ததும் அனைவரும் துக்கம் கடைபிடித்தனர். இதன்பின்னர் அனைவரும், அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த குண்டு வீசப்பட்ட மூன்றாவது நாளில் அமெரிக்கா, 'குண்டுமனிதன்' என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை நாகசாகி நகர் மீது வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.