அமெரிக்காவில் அடர்ந்த பனியின் காரணமாக சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
வடமேற்கு ஓரிகோன் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி வழியாக மேலே பறந்து கொண்டிருந்த போது கடும் பனிபொழிவின் காரணமாக விழுந்து நொறுங்கியது.
ஒற்றை எஞ்சின் பொறுத்தப்பட்ட இந்த விமானம் முதலில் ஒரு மரத்தின் மீது மோதியது. பின்னர் நிலைத்தடுமாறி வீட்டின் கூரை மீது விழுந்து வெடித்தது. இதனால் அருகில் இருந்த மற்றொரு வீடும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு பேரும், வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளும் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் ஒரு குழந்தையின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.
நான்கு இருக்கைகள் மட்டுமே கொண்ட தனியாருக்குச் சொந்தமான 'செஸ்னா' என்ற இந்த சிறிய ரக விமானம் வாடகைக்கு விடப்பட்டது. விமானத்தில் விமான ஓட்டியும், ஒரே ஒரு பயணியும் மட்டும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.