அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் (NSG) இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் சமர்ப்பித்த பின்னர், வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் மீது விவாதிக்கப்படும் என்று புஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமெரிக்க அரசின் துணை செய்தித் தொடர்பாளர் கன்சாலோ கலிகோஸ், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) ஒப்புதல் அளித்துள்ளதை குறிப்பிட்டார்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அனுமதியை அமெரிக்கா பெற்று விடும் என்றும், இதையடுத்து செப்டம்பர் 8ஆம் தேதி அல்லது அதற்கு மேல் இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் கன்சாலோ தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கு துவக்கத்தில் இருந்தே அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டிய கன்சாலோ, இதனால் இரு நாட்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெறுவதுடன், அணு சக்தி தொழில்நுட்பம் முறையாக பயன்படுத்தப்படும் என்பதால் உலக நாடுகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றார்.
வியன்னாவில் வரும் 21ஆம் தேதி அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்குழுவில் உள்ள 45 உறுப்பு நாடுகளிடமும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை இந்தியாவுக்கு அமெரிக்கா பெற்றுத் தரும் எனத் தெரிகிறது.