இமாச்சல் பிரதேசம் மாநிலம் நயன தேவி கோவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு இங்கிலாந்து அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சர் கிம் ஹொவெல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நயன தேவி கோவில் நெரிசலில் சிக்கி 146 பக்தர்கள் பலியான நிகழ்வு மிகுந்த மன வருத்ததை அளித்துள்ளது.
இறந்தவர்களில் அதிக அளவிலான குழந்தைகளும் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். நெரிசலில் சிக்கி பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து அரசின் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நயன தேவி கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. அருகில் உள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மலை மீது அமைந்துள்ள அந்த கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.