நேபாளத் துணை குடியரசுத் தலைவர் பரமானந்தா ஜா இந்தியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதை அடுத்துத் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் இன்றும் தொடர்ந்ததால், இந்திய எல்லையில் உள்ள 22 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரான பரமானந்தா ஜா கடந்த ஜூலை 23இல் நேபாளத் துணை குடியரசுத் தலைவராக இந்தியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நேபாளியை விடுத்து இந்தியில் இவர் பிரமாணம் செய்துகொண்டது சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, தாருஹட் போராட்டக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று தாருஹட் போராட்டக் குழுவினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தினால், இந்திய எல்லையில் உள்ள டெராய் மாகாணத்தைச் சேர்ந்த 22 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மொராங், சன்சாரி, டாங், ரூபன்டெஹி, ராட்டாஹட் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போராட்டங்களினாலும், இதனால் போக்குவரத்துத் தடைபட்டதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது என்று காண்டிபுர் ஆன்லைன் ஊடகம் தெரிவிக்கிறது.
முன்னதாகத், தனது நடவடிக்கை இந்தி பேசாத மக்களின் உணர்வுகளைப் பாதித்திருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கடந்த மாதம் ஜூலை 29இல் பரமானந்தா அறிவிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரமானந்தாவின் பதவிப் பிரமாணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நேபாளி வழக்கறிஞர் பால் கிருஷ்ணா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், பிரதமருக்கும் துணை குடியரசுத் தலைவருக்கும் நேபாள உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.