சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள் இன்று நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 16 காவல்துறையினர் பலியானார்கள்.
காஷி நகரில் உள்ள அந்த காவல்நிலையத்தை நோக்கி இரண்டு லாரிகளில் வந்த வன்முறையாளர்கள் திடீரென இரண்டு கையெறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் காவல்நிலையத்தில் இருந்த 16 காவல்துறையினர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் காவல்நிலையம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கிய இந்நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசு, ஒலிம்பிக் போட்டியின் போது பாதுகாப்புக்காக 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.