வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு 5 அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
டாக்காவின் அக சடேக் சாலையில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 உயிரிழந்தனர். அவர்களின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த 5 பேர் பலத்த தீ காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்று உடனடியாகத் தெரியவில்லை. தீயணைப்பு குழுவினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் போராடி மேலும் தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.