அல்கய்டா தீவிரவாத அமைப்பில் பின்லேடனுக்கு அடுத்ததாக கருதப்படும் அய்மன் அல்-ஜவஹரி படுகாயமடைந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறையினரின் பார்வைக்கு கிடைத்த சில கடிதங்களில் அல்-ஜவஹரிக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் மூலம் அல்-ஜவஹரி பாகிஸ்தானின் மலைப்பாங்கான எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
உள்ளூர் தலிபான் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் எழுதியுள்ள கடிதத்தில் அல்-ஜவஹரி கடும் வலியால் அவதிப்படுவதாகவும், அவரது காயங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் அல்கய்டாவின் கபாப் அல்-மஸ்ரி உட்பட 6 அரேபியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் தாக்குதல் நடத்தபட்ட பகுதியில் அல்-ஜவஹரி இருந்தாரா என்பதை அமெரிக்க ராணுவம் அப்போது உறுதி செய்யவில்லை.
இதற்கிடையில் இக்கடிதம் ஜூலை 29ஆம் தேதி எழுதப்பட்டுள்ளதால், அவர் அத்தாக்குதலின் போது காயமடைந்திருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.