இஸ்ரேல் பிரதமர் எஹுட் ஆல்மெர்ட் வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கடிமா கட்சிக் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், பதவியில் இருந்து விலகுவேன் எனக் கூறினார்.
தன் மீதான லஞ்சக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நாட்டு மக்கள் எதிர்காலத்தில் உணர்ந்து கொள்வர் என்றும், வரும் 17ஆம் தேதி நடைபெறும் கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆல்மெர்ட் தெரிவித்தார்.
அவரது இந்த அதிரடி முடிவு, அவரின் 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2006இல் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஆல்மெர்ட் அன்பளிப்பாக பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கட்சிக்குள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அவப்பெயர் ஏற்பட்டது.
இதன் காரணமாக முக்கிய கூட்டணிக் கட்சியான தொழிலாளர் கட்சி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது ஆல்மெர்ட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் திப்பி லிவ்னி, போக்குவரத்து அமைச்சர் ஷவுல் மோஃபாஸ் இருவரும் கடிமா கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவர் கட்சித் தலைவராக தேர்வு செய்யபடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.