பெல்ஜியம் நாட்டில் டச்சு மொழி பேசும் மக்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து அந்நாட்டு பிரதமர் யுவேஸ் லெட்டர்மே பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார்.
நேற்று அந்நாட்டு மன்னரைச் சந்தித்த அவர், பதவி விலகல் கடிதத்தை அளித்தார். தனது பதவி விலகல் சம்பந்தமாக இனி மன்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம்தான் அவர் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற நான்கே மாதத்தில் அவர் இந்த பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார்.
அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை காரணமாக அந்நாட்டுக்கு வரவேண்டிய அயல்நாட்டு முதலீட்டில் பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று சில வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 5 லட்சம் மக்களில் டச்சு மொழி பேசும் மக்கள் 60 விழுக்காடு பேர் உள்ளனர். அவர்கள் அந்நாட்டின் வடக்குப்பகுதியில் வசித்து வருகின்றனர். பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சுயாட்சி பிரச்சினையில், நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது தோல்வியடைந்ததன் காரணமாக அந்நாடு மொழி அடிப்படையில் பிளவு படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.